தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, ரெயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், கடந்த 20ஆம் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது, பெண் பயணி ஒருவர் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதனை ஊழியர் நிதிஷ் குமார், நிலைமையை உணர்ந்து துரிதமாக செயல்பட்டு, அந்தப் பெண்ணை ரெயிலுக்கும் மேடைக்கும் இடையில் சிக்காமல் காப்பாற்றியுள்ளார்.
Swift alertness by Shri Nithish Kumar, Ticket Checking Staff (CCTC/TBM), at Tambaram on 20.12.2025, saved a lady passenger who accidentally slipped while boarding a Beach-bound train.
His timely action and presence of mind averted a serious accident, reflecting exemplary… pic.twitter.com/qRhNsgLcrA
— Southern Railway (@GMSRailway) December 22, 2025
அவரது உடனடி நடவடிக்கையால் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டதாக தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், ரெயில்வே ஊழியரின் கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அவரது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அண்மைக் காலங்களில் ரெயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகள் தவறி விழும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ள நிலையில், இந்த சம்பவம் பயணிகள் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
