ரயில் பெட்டியின் மின்சார சாக்கெட்டில் மின்கெட்டிலை இணைத்து மேகி நூடுல்ஸ் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணை மத்திய ரயில்வே அடையாளம் கண்டு விசாரணை நடத்தியது. புனே சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த சரிதா லிங்காயத் என்பவரின் மீது ரயில்வே சட்டம் பிரிவு 154–ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பயணிகள் பாதுகாப்பிற்கு ஆபத்தான செயல் என ரயில்வே தெரிவித்துள்ளது.

அக்டோபர் 16 அன்று ஹரித்வாரிலிருந்து புனே நோக்கிப் பயணித்த 07364 ரயிலின் B2 பெட்டியில் லிங்காயத் தனது குடும்பத்துடன் பயணம் செய்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், “சமையலறை எங்கும் எல்லா இடங்களிலும் உள்ளது” என அவர் மகிழ்ச்சியுடன் கூறியதுடன், “விடுமுறை பயணத்திலும் எனக்கு சமையலிலிருந்து விடுமுறை கிடைக்காது” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மேகி சமைக்கும் இடையே, “இந்த கெட்டிலை வைத்து குறைந்தது 15 பேருக்கு தேநீர் தயாரிப்பேன்” என்றும் அவர் சொல்வது வீடியோவில் கேட்கப்படுகிறது. அருகிலிருந்த சக பயணிகள் (குடும்பத்தினர்) புன்னகையுடன் அந்த செயலுக்கு ஆதரவாக இருப்பது போலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

இந்த வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் பலர் இது பாதுகாப்பில்லாததும் பொறுப்பற்ற செயலுமாக இருப்பதாக கடும் விமர்சனம் எழுப்பினர். சிலர் “படைப்பாற்றல்” என பாராட்டினாலும், பெரும்பாலோர் ரயிலின் மின்சார வசதிகளை சமையலுக்குப் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது என எச்சரித்தனர்.

மத்திய ரயில்வே, சம்பவத்துக்கு பதிலளித்து, ரயில்களில் தனிப்பட்ட மின்கெட்டில்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது, மேலும் இது தீ விபத்து, மின் தடைகள், பயணிகள் பாதுகாப்பு குறைவு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என தெரிவித்தது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவர் பயன்படுத்திய சமூக ஊடக சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.

ரயில்வே நடவடிக்கைக்கு பின், சரிதா லிங்காயத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு வீடியோ வெளியிட்டார். அதில், “எனக்கு யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை”. “இதனால் ஏற்படக்கூடிய ஆபத்து எனக்குத் தெரியாது”. “மும்பை RPF எனக்குத் தவறு உணர்த்தியது,  நான் இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என்று கூறினார்.

மேலும், “ரயில்களில் மேகி சமைக்கவோ அல்லது கனரக மின்சார சாதனங்களைப் பயன்படுத்தவோ கூடாது. இது குற்றம்; உயிருக்கு ஆபத்தானது” என பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.