வாரணாசி ரயில் நிலையத்தில் செயல்படாத எஸ்கலேட்டரில் மாற்றுத்திறனாளி ஒருவர் கைமுறையாக ஏற முயற்சிக்கும் காட்சி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரவலான கவலைக்குரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்திய இந்த வீடியோ, உள்கட்டமைப்பு பராமரிப்பு குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோவில், ஒரு கையில் கைத்தடி மற்றும் மற்றொரு கையில் கனமான லக்கேஜ் பையைத் தாங்கிய மாற்றுத்திறனாளி பயணி, செயலிழந்த எஸ்கலேட்டரின் செங்குத்தான உலோகப் படிகளில் மிகுந்த முயற்சியுடன் ஏற போராடுகிறார்.
அவரின் நகர்வு மிகவும் மெதுவாகவும் கவனமாகவும் இருந்தாலும், சமநிலை இழக்கும் அபாயம் தெளிவாகத் தெரிய, இணையவாசிகள் பலரும் அவரது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.

 

வீடியோ படமாக்கப்பட்ட இடம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், அதில் இடப்பட்டுள்ள குறிப்புகள் இது வாரணாசி ரயில் நிலையம் எனப்படுகிறது. இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, லக்னோ வடக்கு ரயில்வே பிரிவின் டிஆர்எம் விளக்கம் வெளியிட்டார். அதன்படி: 24 நவம்பர் 2025 அன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரை மின் தடங்கல் ஏற்பட்டது. உடனடியாக மின் விநியோகம் DG பேக்கப்புக்கு மாற்றப்பட்டது

மின்சாரம் திரும்பியபின் எஸ்கலேட்டர்களுக்கு கட்டாய பாதுகாப்பு மீட்டமைப்பு தேவைப்படுவதால் சில நிமிட தாமதம் ஏற்பட்டது. சுமார் 8 நிமிடங்களில் அனைத்தும் மீண்டும் செயல்பாட்டில் வந்தன. தற்போது எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்டுகள் முழுமையான முறையில் இயங்குகின்றன எனவும் கூறப்பட்டது

மேலும் ரயில்வே விளக்கத்தின்போதும், சமூக ஊடகங்களில் பல பயணிகள் கேள்விகளை எழுப்பினர்: மக்கள் பாதுகாப்புக்காக செயலிழந்த எஸ்கலேட்டர்களுக்கு முன் எச்சரிக்கை தடுப்பு அமைக்கப்படவில்லையா? மாற்றுத்திறனாளிகள் மற்றும் கனமான சுமைகளுடன் வரும் பயணிகளுக்கான மாற்று வழிகாட்டுதல்கள் ஏன் இல்லை? இந்த வகை கோளாறுகள் அடிக்கடி நிகழ்வதை பற்றி நிரந்தர தீர்வு எப்போது?“மின்தடை ஏற்பட்டால் எஸ்கலேட்டருக்கு முன் தடுப்பு வைத்து, ‘சேவையில் இல்லை’ என குறிப்பிட வேண்டும். செயலிழந்த எஸ்கலேட்டரின் மீது நடப்பது ஆபத்தானது” எனக் கண்டித்தார்.