உலகப்புகழ் பெற்ற ஆடம்பர பேஷன் நிறுவனமான ‘குச்சி’ (Gucci), ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிரீமியம் டைப்பர்களை (Diapers) அறிமுகம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது ஒரு திட்டமிட்ட வதந்தி என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பேஷன் உலகில் வினோதமான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், ‘குச்சி’ நிறுவனம் குழந்தைகளுக்காக பிரத்யேக டைப்பர்களை அறிமுகம் செய்துள்ளதாக ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.
அந்தத் தகவலின்படி, 7 டைப்பர்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 50,000). அதாவது, ஒரு டைப்பரின் விலை மட்டும் சுமார் ரூ. 7,000 எனச் சொல்லப்பட்டது. இதில் ஆர்கானிக் பருத்தி, பாக்டீரியா எதிர்ப்பு அடுக்குகள் மற்றும் மென்மையான போன்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவுகளில் கூறப்பட்டிருந்தது.
Gucci 490 dolarlık (22 bin TL) bebek bezini satışa çıkardı. pic.twitter.com/qWOffjzJWL
— Bee Haber (@beehaber) March 31, 2026
இந்த விலையைக் கேட்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்ததோடு, பல்வேறு கிண்டலான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். “7 ஆயிரம் ரூபாய் டைப்பரை மாட்டினால் குழந்தை அழுவதை நிறுத்திவிடுமா?”, “ஒரு பேக் டைப்பரின் விலை ஒரு சராசரி மனிதனின் ஒரு மாத சம்பளத்திற்குச் சமமாக உள்ளதே” எனப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இந்தத் தகவல் வைரலானதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உண்மைத்தன்மை ஆய்வில் (Fact Check), ‘குச்சி’ நிறுவனம் இது போன்ற எந்தவொரு பிரீமியம் பேபி டைப்பர்களையும் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எவ்வித ஆதாரமும் இல்லாத, யாரோ ஒருவரால் கிளப்பி விடப்பட்ட வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் முன்னெடுத்துச் செல்கின்றனர். இதனால் தவறான தகவல்கள் மக்களிடையே பரவுகின்றன. எனவே, எதையும் பகிரும் முன்பு அது உண்மையா என்பதைச் சரிபார்க்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
