உத்தரப்பிரதேச மாநிலம் பரூகாபாத் ஆவாஸ் விகாஸ் காலனியில், ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியர் ஒருவர் தனது சொந்த வீட்டின் அருகிலேயே உறவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரூகாபாத் ஆவாஸ் விகாஸ் காலனியில் வசித்து வந்த 70 வயதான சரளா கட்டியார், சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில், தனது வழக்கமான நடைப்பயிற்சிக்காக வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த ‘மகிந்திரா தார்’ரக எஸ்.யு.வி காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் சரளா கட்டியார் மீது மோதி ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்தவுடன், அதனை ரகசியமாக வைக்க குடும்பத்தினர் முயன்றதாக அக்கம் பக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் உடனடியாக வீட்டிற்குள் நிறுத்தப்பட்டதுடன், இது குறித்து காவல்துறைக்கும் எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
⚠️ ट्रिगर वार्निंग:
इस दुखद हादसे में बुजुर्ग महिला की मौत
हो गई है..!लेकिन सवाल ये कि थार के बैक होने का कारण क्या रहा होगा और गाड़ी के अंदर कोई था कि नहीं…?
मामला फर्रुखाबाद जनपद का है। pic.twitter.com/RNVU5TOzYV
— Rahul Saini (@JtrahulSaini) April 4, 2026
இது குறித்து குடும்பத்தினரிடம் கேட்டபோது, “இது எங்களது குடும்ப விவகாரம்” என்று கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். எனினும், உயிரிழந்தவரின் குடும்பத்தின் செல்வாக்கு காரணமாகவே இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் கபில் சவுத்ரி இது குறித்து கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.
இந்தியச் சட்டப்படி, வாகன விபத்தினால் ஏற்படும் மரணங்கள் குறித்து, அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர், இதற்கு முன்பும் பலமுறை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் கார் ஓட்டி சிறு விபத்துகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயங்களில் பண பலத்தைக் கொண்டு அவை சட்ட நடவடிக்கையின்றி முடிக்கப்பட்டதாகவும், அதே போன்ற அஜாக்கிரதையான செயல்பாடே தற்போது ஒரு உயிரைப் பறித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
