இந்தியாவின் அல்போன்சா, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற பிரீமியம் ரக மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. மாம்பழங்களில் உள்ள பழ ஈக்கள் போன்ற பூச்சிகளை அழிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் செய்யப்பட்ட பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் ஜப்பானிய ஆய்வாளர்கள் பெரிய குளறுபடிகளைக் கண்டறிந்ததே இந்தத் தடைக்குக் காரணமாகும்.
தனது நாட்டு விவசாயத்தைப் பாதுகாக்க பூச்சிகள் விஷயத்தில் கடுமையான விதிகளைப் பின்பற்றும் ஜப்பான், மார்ச் 25, 2026-க்குப் பிறகு சான்றிதழ் பெறப்பட்ட இந்திய மாம்பழங்களை ஏற்க மறுத்துவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் மீண்டும் தடை விதித்திருப்பது, ஏற்கனவே எல் நினோ மற்றும் கடுமையான வெப்ப அலையால் 85-90 சதவீத பயிர்களை இழந்து தவிக்கும் மகாராஷ்டிராவின் அல்போன்சா விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய பேரிடியாக அமைந்துள்ளது.
ஜப்பான் சந்தையை இழந்தாலும், உலகளவில் இந்திய மாம்பழங்களுக்கான தேவை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சிங்கப்பூரில் தற்போது இந்திய மாம்பழங்களுக்குப் பயங்கர மவுசு ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அனைத்தும் மிக வேகமாக விற்றுத் தீருவதாகவும் சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, கடந்த காலங்களில் யுஏஇ, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பல மில்லியன் டாலர் மதிப்பிலான மாம்பழங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
ஜப்பானின் இந்த தற்காலிக பின்னடைவுக்கு மத்தியிலும், பிற உலக நாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
