சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுடன் மிக உயர்மட்ட அளவிலான ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில், தாலிபான் பாதுகாப்பு அமைச்சரின் முன்னிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், தங்களைத் தற்காத்துக் கொள்ள ரஷ்யாவின் அதிநவீன ‘S-400’ அல்லது ‘பான்ட்சீர்’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தாலிபான்கள் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

சோவியத் யூனியன் காலத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி தலிபான்களை எதிர்த்துப் போரிட்ட ரஷ்யா, தற்போது அதே தலிபான் அரசுக்கு ராணுவ ரீதியாக உதவ முன்வந்திருப்பது அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ராணுவ ஒப்பந்தத்தால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான், ரஷ்யாவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், தங்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் கைகோர்த்துச் செயல்படுவதாகப் புதிய வெற்றுப் புகாரைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் ராணுவ பலமும் தாலிபான்களுக்குக் கிடைப்பது பாகிஸ்தானின் ராணுவ மேலாதிக்கத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் இந்த திடீர் வியூகம் இப்பிராந்தியத்தில் தங்களின் செல்வாக்கை பாதிக்கும் என்பதால் அமெரிக்காவும் சீனாவும் தங்களது எல்லையில் தீவிர கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளன.