உலக நாடுகளின் பொருளாதாரத்தை உலுக்கி வரும் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை நோக்கி முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளன. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச்சேதமும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ள சூழலில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தொடர் அழுத்தம் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தின் சில முக்கிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த இறுதி வரைவு திட்டத்திற்கு விரைவில் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி, அங்கு வைக்கப்பட்டுள்ள கடற்படை கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக, ஈரான் எல்லையைச் சுற்றி அமெரிக்கா விதித்துள்ள ராணுவ முற்றுகையையும், பொருளாதாரக் கெடுபிடிகளையும் தளர்த்திக்கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும் உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய இந்த வளைகுடா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற இந்த அறிவிப்பு, சர்வதேச சந்தைகளுக்கும் உலக நாடுகளுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
