நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பல அறிவுறுத்தல்களை கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

அதாவது ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், நாம் அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்களை வேலை வாங்கி அனைத்து ஓட்டுகளையும் பெற முயற்சி செய்யுங்கள், ஒரு ஓட்டு சாவடியில் ஒரு ஓட்டு குறைந்தாலும் லோக்சபா தொகுதிக்கு 1500 ஓட்டுகள் வரை குறைந்து விடும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் . கடந்த தேர்தல்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு ஓட்டு சாவடி அலுவலர்கள் செல்லும்போது பூத் ஏஜென்ட்கள் உடன் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.