டெல்லியில் இன்று (ஜூலை 18) காலை, 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பச்சி பிகார் பகுதியில் உள்ள ‘ரிச்மோண்ட் குளோபல் பள்ளி’, ரோகிணி பகுதியில் உள்ள ‘அபினவ் பப்ளிக் ஸ்கூல்’ உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில், வகுப்பறைகளில் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் வெடி பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளன என்றும், ஒரு ஆன்மாவும் உயிருடன் பிழைக்காது என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், “நான் எனது வாழ்க்கையை வெறுக்கிறேன், இதை முடித்த பின் தற்கொலை செய்து கொள்வேன்” என அச்சுறுத்தல் செய்தியில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தற்கொலை தடுப்பு பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் பள்ளி வளாகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை எவ்வித ஆபத்தும் தெரியவந்ததில்லை என்றாலும், எல்லா முன்னெச்சரிக்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக டெல்லி பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. மூன்று நாட்களுக்குள் மட்டும் ஒரு கல்லூரி மற்றும் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு போலியான மிரட்டல் வந்துள்ளன. நேற்று மட்டும் 12 வயது சிறுவன் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக கைது செய்யப்பட்டு, கவுன்சிலிங் வழங்கி எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போதைய மிரட்டல் உண்மையானதா அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய தவறான முயற்சியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த வகையிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் அனைத்துப் பள்ளிகளை ஐசோலேட் செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பரவாமல் இருக்கவும், பெற்றோர்கள் மனஅமைதியுடன் இருக்கவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.