திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது  செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (25). இவர் ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்ட இருவரும், ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலேயே தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களது காதலில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் குமாரிடம் பேசுவதைத் துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குமார், பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அந்தப் பெண் பேச மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

காதலி பேசாததால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த குமார், வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.