நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் நபர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த நபர் நெருக்கமாகியுள்ளார்.
ஒருகட்டத்தில், தான் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துள்ளதாகவும், அதிக அளவு தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்ததால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பொய்கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், அவரை மீட்கப் பல்வேறு தவணைகளாக மொத்தம் 25 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
பணம் கொடுத்த பிறகு அந்த நபரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், அந்த நபர் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து அந்தப் பெண்ணை ஏமாற்றியது அம்பலமானது.
இந்த நூதன மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
