கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பரப்புவிளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேஷ் (29) என்பவரது மனைவி மஞ்சு (27). இவர்களது மகனாக சுதீஷ் (3), மகளாக நமித்ரா (2) இருந்தனர். நேற்றுமுன்தினம் மாலை, 2 வயது நமித்ரா வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சிறுமி திடீரென காணாமல் போனதையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயார் மஞ்சு குழந்தையை தேடத் தொடங்கினார். அருகிலுள்ள கால்வாயை கவனித்தபோது, அதில் தனது மகள் நமித்ரா தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த அவர் கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை தண்ணீரிலிருந்து மீட்டு உடனடியாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்தனர். இந்த சோகமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
