குஜராத்தில் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை நீருக்குள் இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வதோதரா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றின் கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஆற்றின் ஓரத்தில் நின்றிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பாய்ந்து வந்த முதலை அவரைப் பிடித்து ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
இந்த கோரமான காட்சிகள் அங்கிருந்தவர்களின் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் பல மணிநேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த நபரின் உடலை மீட்டனர். முதலை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நர்மதா ஆற்றில் முதலையின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், பொதுமக்கள் ஆற்றங்கரைக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த துயரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
