மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், அலட்சியத்தால் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. NICU பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் கைகளை எலிகள் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலாவது சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பிறந்த சில நாட்களுக்குள் NICU-வில் சேர்க்கப்பட்ட ஒரு குழந்தையை எலி கடித்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையும், மற்றொரு குழந்தையும் எலியின் கடிக்கு உள்ளானது.

மருத்துவமனையில், குறிப்பாக NICU பகுதியில், எலிகள் நடமாட்டம் நீண்ட நாட்களாக காணப்படுகிறது என்றும், ஒரு பெரிய எலி தொடர்ந்து அங்கு சுற்றிவந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது சுகாதாரத்தின் மீது கேள்விக்குறி எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவர்கள் மற்றும் மூத்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மூத்த மருத்துவர் டாக்டர் பிரஜேஷ் லஹோட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, “மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறங்களில் எலிகள் பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளதென்றும்” தெரிவித்தார்.

தற்போது, குழந்தைகள் இருவரும் மருத்துவ கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டான கண்காணிப்பு வழங்கப்படுகிறது.

 

நோயாளிகளின் உறவினர்கள் வார்டுகளுக்குள் உணவுப் பொருட்களை கொண்டு வருவதால் எலிகள் அதிகரித்துள்ளன. மருத்துவமனையில் பூச்சிக் கட்டுப்பாட்டு பணிகள் கடைசியாக 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தன. அதற்குப் பிறகு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.” இதன் விளைவாக, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான பணிகளை துரிதமாக ஆரம்பித்துள்ளது. NICU பிரிவிலும் எலிகள் நுழையாத வகையில் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.