அரியானா மாநிலம் சோனிபெட் பகுதியில், 19 வயது இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தக் கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐடிஐ சவுக் பகுதியில் தனது ஊருக்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்த அந்தப் பெண்ணிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உதவி செய்வது போல நடித்துக் காரில் ஏற்றியுள்ளனர். தெரிந்தவர்கள்தானே என்று நம்பி ஏறிய அந்தப் பெண்ணுக்கு, அவர்கள் மனித மிருகங்களாக மாறுவார்கள் என்று தெரியவில்லை. வழியிலேயே மது அருந்திவிட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்குப் பெண்ணைக் கடத்திச் சென்று, அந்த மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

​இந்தக் கொடூரத்தைச் செய்துவிட்டு அந்தப் பெண்ணை கிராமத்திற்கு அருகே இறக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தைரியமாகத் தனது குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் உடனடியாகக் காவல்துறையை நாடியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிரமாகச் செயல்பட்ட போலீஸார், குற்றவாளிகளில் ஒருவனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரவேண்டிய கிராமத்து இளைஞர்களே இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.