உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காவலர்களின் அலட்சியத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற இளைஞர், ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட வாடகைத் தகராறு காரணமாக அங்குள்ள பெண்கள் காவல் சாவடிக்கு வந்துள்ளார். அங்கு பெண் காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், இந்த விவகாரம் குறித்து அருகில் உள்ள ஆண்கள் காவல் நிலையத்தை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

“>

இதனால் ஆத்திரமடைந்த ராஜ் குமார், மதுபோதையில் காவல் சாவடியின் இரும்புக் கதவை பலமாகத் தட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அங்கிருந்த பெண் காவலர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள காவல் சாவடியின் உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து ராஜ்குமார் அங்கிருந்த கண்ணாடி கதவைத் தட்டியபோது, அது உடைந்து அவரது கையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டு தீவிர இரத்தப்போக்கு உண்டானது. காயமடைந்த அவர் உதவி கேட்டு சுமார் 40 நிமிடங்கள் கதறியும், உள்ளே இருந்த பெண் காவலர்கள் கதவைத் திறக்கவோ அவருக்கு உதவவோ முன்வரவில்லை என நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் காவல்துறை அவசர உதவி எண்ணான 112-க்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையோரம் சென்ற ஆட்டோக்களை நிறுத்த முயன்றும் யாரும் நிறுத்தவில்லை.

இறுதியாக சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் காவல்துறை அவசர உதவிக் கட்டமைப்பின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.