கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, பங்குனி உத்திர திருவிழாவிற்காக இன்று மாலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கியத் திருவிழாவிற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது. நாளை காலை முறைப்படி கொடி ஏற்றப்பட்டவுடன், பங்குனி உத்திரத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழா காலங்களில் ஐயப்பனுக்குச் சிறப்புப் பூஜைகளும், நெய் அபிஷேகங்களும் நடைபெறும் என்பதால், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காகத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு செய்துள்ளது.
