தமிழக தேர்தல் களத்தில் மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான திருநெல்வேலியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான தேர்தல் வரலாறு நீடித்து வருகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும், இங்கு ஒரு வேட்பாளர் கூட தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தத் தொகுதியின் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஒருமுறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருப்பவர், அடுத்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் போது தோல்வியையே சந்தித்து வந்துள்ளனர். மக்கள் ஒவ்வொரு முறையும் புதிய முகங்களுக்கே வாய்ப்பளிப்பதை ஒரு எழுதப்படாத விதியாகவே வைத்துள்ளனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரு பெரும் கட்சிகளுமே இந்த ‘நெல்லை சென்டிமென்ட்’ வளையத்திற்குள் சிக்கி பலமுறை தோல்வியைத் தழுவியுள்ளன.
தற்போது திருநெல்வேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.க-வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். தொகுதியின் இந்த நீண்டகால வரலாற்றைக் கருத்தில் கொண்டும், தற்போதைய அரசியல் சூழலாலும் அவர் இந்த முறை தனது தொகுதியை மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடைபெறவுள்ள தேர்தலில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலிக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நெல்லை மண்ணில் இந்தத் தடவையும் அதே ‘வரலாறு’ திரும்புமா அல்லது தற்போதைய எம்.எல்.ஏ தொகுதியை மாற்றுவதன் மூலம் புதிய திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நயினார் நாகேந்திரன் சாத்தூருக்குச் சென்றால், திருநெல்வேலியில் களம் காணப்போகும் புதிய வேட்பாளர்கள் யார் என்பது குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
