தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த பூவை ஜெகன்மூர்த்தி, தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கே.வி.குப்பம் (தனி) தொகுதியில், தாமே வேட்பாளராகக் களம் இறங்கப் போவதாகத் தெரிவித்தார்.

தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அவர் உறுதிபடக் கூறினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இவரின் இந்த அறிவிப்பு கே.வி.குப்பம் தொகுதித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெற்று, தொகுதி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்றும், அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் அதிருப்தி அடைந்த பூவை ஜெகன் மூர்த்தி இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கூடுதல் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அவர் எந்த காலத்திலும் உங்கள் கட்சியை கைவிட மாட்டேன் என வாக்குறுதி கொடுத்ததால் தற்போது அந்த ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டு தானே தேர்தலில் போட்டியிடுவேன் என்று பூவே ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பூவே ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏவாக தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.