2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. திமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில், தமிழகத்தின் ‘பவர்ஃபுல்’ அமைச்சர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த முறை தனது சொந்த மாவட்டமான கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தவும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றவும் ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’ இதுவென்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி களம் இறங்கும் கோவை தெற்கு தொகுதியில், கடந்த முறை பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை அதிமுக – பாஜக கூட்டணியில் அந்தத் தொகுதி அதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி மற்றும் அம்மன் அர்ஜுனன் இடையே நேரடி ‘மெகா’ மோதல் உருவாகியுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவை தெற்கில், திமுகவின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் செந்தில் பாலாஜி வெற்றி பெறுவாரா அல்லது அதிமுக தனது பலத்தை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தை எட்டியுள்ளது.
