2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, திமுக அமைச்சரவையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த பொன்முடி, மனோ தங்கராஜ், ஆர். காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகிய நான்கு பேரின் பெயர்கள் இந்த முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி, இந்த முறை அதிரடியாகக் கூட்டணி கட்சியான சிபிஎம் (CPM) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அமைச்சர்களுக்குச் சீட் மறுக்கப்பட்டாலும், அவர்களின் வாரிசுகளுக்கு திமுக தலைமை சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர். காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் காந்தியும், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் கௌதம சிகாமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

“அப்பாவுக்குப் பதில் மகன்” என்ற இந்த ஃபார்முலா, வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. சீனியர்களைத் தேர்தல் களத்திலிருந்து ஒதுக்கிவிட்டு, இளைய ரத்தத்தைப் பாய்ச்ச ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முடிவு, வரவிருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.