நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஏளூர் பகுதியில், வேகமாக வேன் ஓட்டியதாகக் கூறி, பள்ளி வேன் டிரைவர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாககுளம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தை ஓட்டிவந்துள்ளார். அவர் தனது வேனில் ஏளூர் பகுதிக்குச் சேர்ந்த மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துவரும் பணியில் இருந்தார்.
இன்று காலை மாணவர்களை வேனில் ஏற்றி கொண்டு வந்தபோது, வேகமாக ஓட்டினார் என்ற காரணத்தைக் கொண்டு சிலர் விஜய்யை வாகனத்திலிருந்து கீழே இறக்கி, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அந்த தாக்குதலில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது மனைவியிடம் சென்றதும், உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விஜயின் உடலை பார்த்ததும், அவரது மனைவி உள்ளிட்டோர் கண்ணீரில் மூழ்கி கதறி அழுதனர்.
“எதற்காக அடித்தீர்கள்?.. பேசி தீர்த்திருக்கலாமே” என உருக்கமாகக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்கள், விஜயின் உடலை பெற்று செல்ல மறுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழ்நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உறவினர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இதேபோன்று நேற்றும் ஒரே பகுதியில் வேறொரு வாகன ஓட்டுநர் தாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்த ஊரில் யாரையும் தவறாகக் கண்டால் உடனே அடிக்கின்ற மனப்பான்மை வளர்ந்துவிட்டது. இது நிறுத்தப்பட வேண்டும். வேன் டிரைவர்களுக்கு பாதுகாப்பு தேவை,” என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விஜய்யை தாக்கியவர்களை சிலர் வீடுகளில் ஒளித்துவைத்துள்ளனர் என்றும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என விஜய்யின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
