மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஏற்படும் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாகவே சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாகவும், அவ்வாறு மின்தடை ஏற்பட்ட உடனே அதற்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பழைய டிரான்ஸ்பார்ம்கள் இருப்பதால் ஒரு சில இடங்களில் பழுது ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும் நிலத்தடி கம்பிகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்தடை தொடர்பான சிக்கல்களைக் கண்காணிக்க 7 சிறப்புத் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறையைப் போக்கத் தேவைக்கேற்ப ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக மின்சாரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதோடு, தற்போது 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தவித்து வருவதாகவும் அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். மின் துறையில் நடந்து வந்த ஊழல்களையும் சுரண்டல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதே நிலை இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் மின் ஊழியர்களின் வேலைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கரூராக இருந்தாலும் சரி, கோவையாக இருந்தாலும் சரி, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், மின் துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இதற்குச் சில நாட்களோ அல்லது சில மாதங்களோ ஆகலாம் என்றும் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
