பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’  என்ற அதிநவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகிறது.

எல்லை பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ட்ரோன்கள், ரேடார்கள், ஸ்மார்ட் கேமராக்கள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளுடன் கூடிய ‘ஸ்மார்ட் பார்டர் கிரிட்’ இந்த இரண்டு எல்லைகளிலும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் வழக்கமான கம்பி வேலி அமைப்பது கடினம் என்பதால், தொழில்நுட்ப உதவியுடன் சுமார் 6,000 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை முழுமையாகப் பாதுகாக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

இந்தத் திட்டம் இந்தியாவின் தற்போதைய ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பை  அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்றும், இதன் மூலம் எல்லையில் நடக்கும் அசைவுகளை உடனுக்குடன் கண்காணித்து பாதுகாப்புப் படையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகளுடன் இணைந்து எல்லையோரப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் விரைவில் ஆய்வு செய்யவுள்ளது.

“>

 

தீவிர வானிலை மாற்றம் மற்றும் புவியியல் சவால்களின் போது இத்தகைய தொழில்நுட்பங்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஸ்மார்ட் வேலி திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.