மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரான் அரசுக்கு 48 மணிநேர கெடு விதித்திருந்த டிரம்ப், அந்த காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே தனது அதிரடி மிரட்டலைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், “ஈரான் அரசு உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால், ஈரானில் உள்ள அனைத்தையும் தரைமட்டமாக்கவும், அந்நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும் நான் தயங்கமாட்டேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமைக்குள் இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என்று டிரம்ப் நம்புகிறார். இதற்கிடையில், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஈரான் அதிகாரிகளுக்கு அமெரிக்கா தரப்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானின் முக்கிய சொத்துக்களை அழிப்பது மற்றும் எண்ணெய் கிணறுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போன்ற ‘பயங்கரமான’ திட்டங்களை டிரம்ப் கையில் வைத்துள்ளார்.

டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை அமெரிக்கா எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’ என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன.