ஜெர்மனி நாட்டில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள், கல்வி, வேலை அல்லது நீண்ட காலப் பயணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டுமானால், இனி அரசின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களில் போர் அல்லது அவசர காலச் சூழல்களில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இது ஒரு நிரந்தரச் சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியின் ‘ராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி நிலவும் காலத்திலேயே இச்சட்டம் ரகசியமாக இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் தயார்நிலையை உறுதிப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி 17 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைத்து ஜெர்மன் ஆண்கள். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லத் திட்டமிடும் மாணவர்கள். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் அல்லது பணி நிமித்தமாக நீண்ட காலம் தங்குபவர்கள். நீண்ட காலச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்பவர்கள் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர், உரிய காரணங்களைச் சமர்ப்பித்து அரசிடம் அனுமதி பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே, ஜெர்மனி தனது இளைஞர்களைக் கண்காணிப்பிலும், ராணுவப் பணிக்கான தயார் நிலையிலும் வைத்திருக்க இத்தகைய கடினமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
