தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு அணி இபிஎஸ் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் உச்சகட்ட மோதல் எட்டிய நிலையில் சி.வி சண்முகம் அணி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்த நிலையில் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை.
இதன் காரணமாக சி.வி சண்முகம் அணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் மீண்டும் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் தற்போது சி.வி சண்முகம் மற்றும் இபிஎஸ் இடையே சமரசம் எட்டிவிட்டதாகவும் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி விங் இரும்பு கோட்டையை அசைக்க முடியாது என்று பதிவிட்ட நிலையில் இன்று எஸ்பி வேலுமணியை சந்திக்க வந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மூத்த தலைவர் கே.சி வீரமணியும் எல்லாம் முடிந்துவிட்டது. தாய் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றார். மேலும் இதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுக ஒன்று சேர்ந்து விட்டது உறுதியாகியுள்ளது.
