ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ தீயாகப் பரவி வருகிறது.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்த இந்தப் போட்டியில், ஹைதராபாத் மைதானத்தில் எஸ்.ஆர்.எச் ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு ஏதோ மந்திரம் ஓதி மைதானத்தை நோக்கி ஊதுகிறார்.

அடுத்த நொடியே சிஎஸ்கே வீரர் சிவம் துபே ஆட்டமிழந்து வெளியேறுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஹைதராபாத் அணி ‘கறுப்பு மந்திரம்’ செய்தே வெற்றி பெற்றதாகப் பேச்சு கிளம்பியது.

இது ஒருபுறமிருக்க, கறுப்பு மந்திரம் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் பிசிசிஐ-யிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாக ஒரு கடிதமு*ம் இணையத்தில் பரவியது.

ஆனால், அந்த வீடியோ மற்றும் கடிதம் என இரண்டுமே போலி என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த வீடியோ, வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட இரண்டு காட்சிகளைத் திட்டமிட்டு எடிட் செய்து ஒன்றிணைக்கப்பட்டது ஆகும்.

அதேபோல், சமீபத்தில் பெங்களூரு மைதானத்தின் டிஜே இசை குறித்து சிஎஸ்கே புகார் அளித்ததை கிண்டல் செய்யும் விதமாக, யாரோ விஷமிகள் இந்தக் கள்ளப் புகார்க் கடிதத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, கறுப்பு மந்திரம் மற்றும் புகார் தொடர்பாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனத் தெளிவாகியுள்ளது.