ஐபிஎல் 2026 தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான சமீபத்திய போட்டிக்குப்பின், ஸ்ரேயஸ் ஐயர் செய்த ஒரு சுவாரசியமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பொருட்களை அடிக்கடி மறந்துவிடும் பழக்கம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும், ரசிகர்களால் அன்போடு ‘சர்பஞ்ச் சாப்’ என்று அழைக்கப்படுபவருமான ஸ்ரேயஸ் ஐயரும் அதே பாணியில் ஒரு செயலைச் செய்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, பரிசளிப்பு விழாவிற்காக  ஸ்ரேயஸ் ஐயர் மேடைக்கு விரைந்தார். அப்போதுதான் தான் காலணிகளை (Shoes) அணியாமல், வெறும் செருப்புடன் (Slippers) வந்திருப்பதை உணர்ந்தார். மீண்டும் டக்அவுட்டிற்குச் சென்று ஷூவை எடுத்து வர நேரமாகும் என்பதால், அருகில் நின்றிருந்த கேமராமேனிடம் அவரது ஷூவைக் கடனாகப் பெற்று அணிந்து கொண்டு மேடையேறினார். ஐயரின் இந்த எளிமையான செயலைக் கண்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

 

255 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 43 ரன்களும், எய்டன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேலும் நடப்புத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.