ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், இந்தியக் குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாட வந்த அழைப்பை நிராகரித்தது குறித்த உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முகமது ஹந்த் ஜாபர் எழுதியுள்ள ‘ரஷித் கான்: ஃபிரம் ஸ்ட்ரீட்ஸ் டு ஸ்டார்டம்’ (Rashid Khan: From Streets to Stardom) என்ற புத்தகத்தில் ரஷித் கானின் கிரிக்கெட் பயணம் குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அவருக்குக் குடியுரிமை வழங்கி, தங்கள் நாட்டு அணிக்காக விளையாட அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, பிசிசிஐ-யின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ரஷித் கானைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் தாலிபான்களின் ஆட்சியைக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, ரஷித் கானுக்கு ஓர் ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே நீங்கள் இந்தியாவிலேயே தங்கிவிடலாம். உங்களுக்குத் தேவையான அனைத்து அதிகாரப்பூர்வக் குடியுரிமை ஆவணங்களையும் நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் இந்தியாவிலேயே வசித்து, இந்திய அணிக்காக விளையாடலாம் என்று அந்த அதிகாரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ரஷித் கான் அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் அழைப்பைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்துப் போன ரஷித் கான், அந்தத் தாராளமான சலுகையை மென்மையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது சொந்த நாட்டிற்காக என்னால் விளையாட முடியாவிட்டால், உலகில் வேறு எந்த நாட்டிற்காகவும் நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன். என் நாட்டு மக்களுக்குக் கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சிக்காகவே நான் விளையாடுகிறேன். எனவே, நான் எனது தாய்நாட்டிற்காக (ஆப்கானிஸ்தான்) மட்டுமே விளையாடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
மேலும் இதேபோன்றதொரு அழைப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்தும் அவருக்கு வந்துள்ளது. ஆனால், தாய்நாட்டின் மீதான பற்று காரணமாக ரஷித் கான் அவற்றைத் துணிச்சலுடன் மறுத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
