இந்தூர் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில், எச்.ஐ.வி பிரிவு மற்றும் மருந்து விநியோக அறைக்குள் பூனைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பெரும் சுகாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
இதில் இரண்டு குட்டிகள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவற்றை பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, எச்.ஐ.வி நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் மையத்திலும் பூனைகள் நடமாடுவதால், அங்குள்ள தூய்மை மற்றும் நோய்த்தொற்று பாதுகாப்பு குறித்து நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்களே சில இடங்களில் பூனைகளுக்கு உணவளித்து பராமரித்து வருவது பாதுகாப்பு விதிமுறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில், எலி கடித்ததில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கசப்பான சம்பவத்திற்கு பிறகும், மருத்துவமனை வளாகத்திற்குள் விலங்குகள் நுழைவதை தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
