மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், புனே மாவட்டம் பாராமதி அருகே இன்று காலை நிகழ்ந்த கோர விமான விபத்தில் காலமானார். மும்பையிலிருந்து பாராமதியில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் செய்தபோது, தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த இரு பாதுகாவலர்கள் மற்றும் இரு விமானிகள் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த உடனே விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்ற போதிலும் எவரும் உயிர்பிழைக்கவில்லை.
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியம் ஒருவரின் பரபரப்பு பேட்டியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “வானில் பறந்துகொண்டிருந்தபோதே விமானத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி அதிவேகமாகச் சரிந்தது. தரையில் மோதிய அடுத்த நொடியே பெரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பந்து போல விமானம் எரியத் தொடங்கியது” என்று அவர் விவரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
