மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம், புனே மாவட்டம் பாராமதி அருகே தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அஜித் பவார், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான உடனேயே விமானம் பெரும் சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்ததால், மீட்புப் பணிகளில் பெரும் சவால் ஏற்பட்டது.

இந்தத் துயரச் சம்பவம் பாராமதி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியொருவர், வானில் இருந்து விமானம் நிலைதடுமாறி இறங்கியபோதே அது விபத்துக்குள்ளாகும் என்று உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். விமானம் தரையில் மோதியவுடன் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 4-5 முறை வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று உள்ளே சிக்கியவர்களை மீட்க முயன்ற போதிலும், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் யாரையும் காப்பாற்ற இயலவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்தார். அஜித் பவாரின் மறைவுக்குப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.