திரைக்கதை மன்னனாக தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் கே.பாக்யராஜ், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கத்தை நினைவு கூறியுள்ளார்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர், ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘மௌன கீதங்கள்’, ‘ஒரு கை ஓசை’, ‘தூரல் நின்னு போச்சு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் களமிறங்கி, வெற்றிப் படங்களை வழங்கி வந்தார்.
குறிப்பாக, பெண்கள் அதிக விருப்பம் பெற்ற ஹீரோவாக அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. எம்.ஜி.ஆர் நடித்திருந்தும் பாதியில் நிறுத்தப்பட்ட ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தை எடுத்துக்கொண்டு, அதற்கென புதிய திரைக்கதை அமைத்து ‘அவசர போலீஸ் 100’ என மாற்றி வெளியிட்டு, அதையும் வெற்றிப் படமாக மாற்றினார் பாக்யராஜ். இந்த படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த பண்பாடுகளுக்கெல்லாம் காரணமாக, பாக்யராஜை தனது “கலையுலக வாரிசு” என எம்.ஜி.ஆர் ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில், பாக்யராஜ் கூறியதாவது, “நான் சினிமாவில் செய்த காரியங்களை பாக்யராஜ் சில வருடங்களிலேயே செய்து முடித்துவிட்டார்.
எனக்கு மாஸ் வர பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால் இவன் இளம் வயதில் இருந்தே மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதனால் தான் என் வாரிசு என்று அறிவித்தேன்” என எம்.ஜி.ஆர் கூறியதாக நினைவு கூறினார். அதே நேரத்தில், ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது பாக்யராஜ் அருப்புக்கோட்டை சென்றிருந்த போது, அவரது மனைவி பூர்ணிமா பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ஆனால் இரண்டு நாட்களுக்குள் தேர்தல் என்பதால் அவர் திரும்பவில்லை. குழந்தை பிறந்துவிட்ட செய்தியை பாக்யராஜ் எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஸ்வீட் கொடுத்தார். ஆனால், எம்.ஜி.ஆர் முகம் சோகமாக மாறி, “நீ அங்க போகவில்லையா?” என கேட்டதுடன், “விமானம் இருக்கு, இப்போவே போயிட்டு நாளைக்கு வா. பிரசாரம் அப்புறமா பார்த்துக்கலாம்” என்று வழிகாட்டினார்.
அதற்கு பாக்கியராஜ் “பரவாயில்ல, நல்லாத்தான் இருக்காங்க. போன் வந்துடுச்சி” என கூறியுள்ளார். அதன்பின்னர், பாக்யராஜ் பிரசாரம் சென்ற இடமெல்லாம், அவரது மனைவி பூர்ணிமா அழைத்து பேசினார்.
பின்னர் தான் தெரிந்தது – பாக்யராஜ் கவலைப்பட கூடாது என்பதற்காக, ஹாஸ்பிடலில் ஒருவரை வைத்து தினமும் பூர்ணிமாவிடம் இருந்து போன் வருமாறு ஏற்பாடு செய்தது எம்.ஜி.ஆர் தான் என்று. இந்த அனுபவத்தை நினைவு கூறிய பாக்யராஜ், “எம்.ஜி.ஆர் ஒரு தலைவராக மட்டுமல்ல, ஒரு மனிதராக மிகச்சிறந்தவர்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
