இன்றைய காலத்தில் நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலர் சிக்கலில் தவிக்கின்றனர். ஒரு சிலர் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியை பயன்படுத்தி ரூபாய் 3 கோடி வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜூட் வின், பரிமாஸ், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்ட விரோத பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா ரகுபதி உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனை அடுத்து சூதாட்டம் செயலிகளுக்கு விளம்பரம் செய்வதற்கு கமிஷன் தொகையாக பிரபலங்கள் அதிக தொகைகளில் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹைதராபாத் காவல்துறை முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சூதாட்டச் செயலிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிப்போர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்கு நுகர்வோர் துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இருப்பினும் சட்டவிரோத முறையில் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி வரும் ஜூலை 30ஆம் தேதி ஆஜராக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு நாட்கள் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் சமீபத்தில் சினிமா துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
