மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் ரயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 189 பேர் பலியாகினர் ,820 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்தச் சம்பவத்தை அடுத்து லஷ்கர் இ குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும் மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே 12 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் தண்டனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தனர். இது குறித்த வழக்கு தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அந்த 12 பேரில் ஏற்கனவே ஒருவர் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மகனை இழந்த ரமேஷ் நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனக்கு அரசாங்கத்திடம் ஒரு கேள்வி இருக்கிறது.
இந்த முடிவை கூறுவதற்கு எதற்காக 19 ஆண்டுகள் ஆனது? கடந்த 2008 இல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை உடனடியாக விதிக்கப்பட்டது. ஆனால் இந்த குண்டுவெடிப்பிற்கு ஏன் 19 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
இன்று சிறையில் இருந்த பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் இல்லை எனில், உண்மையான குற்றவாளிகள் யார்? நீதிமன்றத்தின் தீர்ப்பு வேடிக்கையாக உள்ளது? என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
