தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி நிலுவை என்று எதுவுமே தற்போதைய சூழலில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் வாங்கும் கொள்கை குறித்துப் பேசிய அவர், “ஒரு மாநில அரசு தனது வளர்ச்சித் தேவைகளுக்காகக் கடன் வாங்குவதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், அப்படி வாங்கும் கடன் தொகையை வெறுமனே இலவச மற்றும் நலத்திட்டங்களுக்கு மட்டுமே செலவிடுவதை விடுத்து, மாநிலத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செலவிட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளார்.

​மேலும், கடன் வாங்கும் தொகையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கிய நிதி அமைச்சர், “மாநிலத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கடன் மூலமாக கல்வி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறைக்கான நீண்டகால முதலீடுகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் மாநிலத்தின் பொருளாதாரம் வலுவடையும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நிதி நிலுவை இல்லை என்று கூறியதோடு, இலவச நலத்திட்டங்களுக்காகக் கடன் வாங்குவதற்கு நிர்மலா சீதாராமன் மறைமுகமாகக் கண்டனம் தெரிவித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.