அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தினகரன்,

‘‘கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களை வழிநடத்துவது எங்களின் தொண்டர்கள்தான். அமமுக எடுக்கும் நிலைப்பாடுதான் வெற்றி கூட்டணியை உருவாக்கும்.

இந்தக் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தொண்டர்களுக்கும், எங்களுக்கும் உள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்துகளை நிர்வாகிகள் மூலம் அறிந்து கொண்டு, இந்தத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி தரக்கூடிய கூட்டணியை அமைப்போம்.

அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை மூன்று மாதங்களுக்குள் அறிவிப்பேன். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சில கட்சிகள் எங்களுடன் பேசி வருவது உண்மைதான். ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை’’ என்றார்.

செங்கோட்டையன் கருத்து குறித்து

செங்கோட்டையன், ‘விஜய்க்காக உயிரையும் கொடுப்பேன்’ என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது, தினகரன் கூறியதாவது:

‘‘செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஜெயலலிதாவுக்கு விசுவாசமான தொண்டராக இருந்தவர். அவர் தன்னை தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த நேரத்தில், மக்களால் பேசப்படும் புதிய கட்சியில் தன்னுடைய பங்கு மற்றும் அங்கீகாரம் கிடைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறார்’’ என்றார்.