தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார்.
அவர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை ஒரு அதிகார மையமாகக் கருதாமல், மக்களின் உண்மையான சேவகர்களாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தனது தொகுதிக்கான ‘எல்லைக் காப்பாளராக’ இருந்து மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.
“விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது?”, “கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” எனப் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, நமது வாக்குகள் எங்கும் சிந்தாமல், சிதறாமல் தவெக-வின் ‘விசில்’ சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் தவெக-விற்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் நேரடிப் போட்டி (இருமுனைப் போட்டி) நிலவுகிறது. களத்தில் மக்களோடும், மக்களின் உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்து இருப்பவர்களையே நாம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.
இந்தத் தேர்தல் என்பது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல; இது நல்லவர்களுக்கும், நாட்டை நாசமாக்குபவர்களுக்கும் இடையேயான வாழ்வாங்குப் போர். மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது என்று விஜய் தனது உரையில் வலியுறுத்தினார்.
