மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து, மாநிலத்தில் உள்ள அனைத்து 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் அவருக்கு சவால் விடும் வகையில் ஒரு பலமான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எந்த ஒரு இடத்தையும் காலியாக விடுவதில்லை என்ற உறுதியுடன் காங்கிரஸ் களம் இறங்குகிறது.

மேலும் 294 தொகுதிகளுக்கும் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு இணங்க இந்தத் தனித்து போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், காங்கிரஸின் இந்த முடிவு மேற்கு வங்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.