கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் கணவரை கொலை செய்து, உடலை துங்கபத்ரா ஆற்றில் வீசியதாக மனைவி மற்றும் அவரது காதலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பமேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான ரகு என்பவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகு தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும், இதனால் அவரது மனைவி ஸ்ருதியுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் தோட்டப் பணியாளராக வேலை செய்து வந்த உபைதுல்லாவுடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், உபைதுல்லா ஸ்ருதிக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ரகுவுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ருதியும் உபைதுல்லாவும் ரகுவை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி உபைதுல்லா தனது நண்பர் மூலம் ரகுவை மதுக்கடைக்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ரகுவுக்கு மது கொடுத்த பின்னர் அவரை தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் ரகுவின் உடலை துங்கபத்ரா ஆற்றில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ருதி எதுவும் தெரியாதது போல குடும்பத்தினருடன் சேர்ந்து ரகுவைத் தேடியதுடன், அவர் காணவில்லை என்றும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ருதியின் நடவடிக்கைகளிலும், போலீஸாரிடம் அவர் அளித்த பதில்களிலும் சந்தேகம் ஏற்பட்டதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் ஸ்ருதி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் உபைதுல்லா மற்றும் இந்தக் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் சுரேஷ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ரகுவின் உடலை துங்கபத்ரா ஆற்றில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகெரே மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.