மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாற்றுத்திறனாளி இளைஞர் வினோத் பெமாரம் சௌத்ரிக்கு தொடர்ந்து மன உளைச்சல் மற்றும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான வினோத், புனேவின் போசரி பகுதியில் வசித்து வந்தார். அவரிடம் ஒரு பெண் தொடர்ந்து பணம் கேட்டதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, சரோஜ் நாகநாத் மானே என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.
வினோத் நடத்தி வந்த மளிகைக் கடையில் தனது தங்கக் காதணி காணாமல் போனதாக சரோஜ் குற்றம்சாட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தக் காதணி வினோத்திடம் இருப்பதாகக் கூறி, அவரிடம் ரூ.1 லட்சம் கேட்டதாகவும், பணம் கொடுக்காவிட்டால் போலீஸில் புகார் அளிப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வினோத், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.1 லட்சம் கடன் பெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்தை சரோஜின் வங்கிக் கணக்குக்கு அவர் அனுப்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்குப் பிறகும் சரோஜ் மேலும் ரூ.55 ஆயிரம் கேட்டதாகவும், வினோத்தை தொடர்ந்து அச்சுறுத்தியதாகவும் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். மேலும், வினோத்தின் கடைக்கு மற்றொரு நபரையும் அழைத்து வந்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொடர் மிரட்டல்களால் வினோத் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது தந்தை பெமாரம் லசாரம் சௌத்ரி போலீஸில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ஆரம்பத்தில் பதிவு செய்த வழக்கில் கூடுதல் பிரிவுகளைச் சேர்த்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து 22 நாள்களுக்குப் பிறகு சரோஜ் நாகநாத் மானே கைது செய்யப்பட்டுள்ளார். வினோத் தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்த காணொலியும் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அவர் சந்தித்ததாக கூறப்படும் பிரச்னைகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வினோத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
