குஜராத் மாநிலம், வதோதராவில் பேருந்தின் கதவில் கழுத்து சிக்கிய 8 வயது சிறுவன் திவ்யேஷ் ராத்வா பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த திவ்யேஷ், பிரசாதம் வாங்கிச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது பேருந்து அருகே சிறுவன் விபத்தில் சிக்கியதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்றவர்கள், பேருந்தின் தானியங்கி கதவில் திவ்யேஷின் கழுத்து சிக்கியிருப்பதைப் பார்த்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் திவ்யேஷின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
உயிரிழந்த திவ்யேஷ் ராத்வா, வதோதராவில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை ராகேஷ்பாய் ராத்வா வேலை செய்து வருகிறார். மகன் உயிரிழந்த தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர். சிறுவனின் திடீர் மரணம் வதோதரா பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கபூராய் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான CCTV காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் சிறுவனின் கழுத்து பேருந்தின் கதவில் சிக்கியிருப்பது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் முக்கியமான சில நிமிடங்களுக்கான CCTV காட்சிகள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
