திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய் மீதான தனது அசைக்க முடியாத பாசத்தையும் விசுவாசத்தையும் மிகவும் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேடையில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அமைச்சர் ரமேஷ், “என்னுடைய வாழ்வில் நான் கண்ட ஆகப்பெரும் கனவு இன்று நனவாகியுள்ளது. மேடையில் ஏறியதும் அன்னை தமிழுக்கு எனது முதல் வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்; அதேபோல் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு எனது உயிர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாண்புமிகு முதல்வர் அண்ணன் விஜய் அவர்களே என்று அவரை நான் மேடையில் நேருக்கு நேராக அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என் நீண்ட நாள் கனவு இன்று நிஜமாகியுள்ளது” எனக் குறிப்பிட்ட அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டை நகரம் இன்று ஒட்டுமொத்தமாகத் தளபதியின் கோட்டையாக அக்மார்க் கம்பீரமாக மாறிவிட்டது என்றும் பெருமிதத்துடன் முழங்கியுள்ளார்.

திருச்சி மக்கள் சந்திப்பு விழாவில் அமைச்சர் ரமேஷ் பேசியுள்ள இந்த அதிரடியான பாச உரை, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் படுவேகமாகப் பரவி இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.