சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மாற்றங்களை உருவாக்க குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் புதிய அரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் தங்களால் நேரடியாக ஆதரவு அளிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் விளக்கினார். திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என்ற கேள்விக்கு, வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் மனநிலையை அறிந்து, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
