மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில், பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
43 வயதான ஷைலா சோனார் என்ற பெண், தனது முன்னாள் காதலனின் வீட்டிற்குள் திடீரென புகுந்து அவரது மனைவி சாதனா சோன்பேத்கர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த சாதனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கொலையாளி ஷைலாவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்தக் கொலைக்கு பின்னால் நீண்ட காலப் பகை இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, கொலையுண்ட பெண்ணின் கணவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டியதாகவும் ஷைலா போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்தத் தகராறு காரணமாக இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான பகை இருந்து வந்துள்ளது. இந்த ஆத்திரத்திலேயே ஷைலா இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தற்போது இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
