2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்பி ஆ.ராசா தொடர்பான சர்ச்சை ஆடியோ விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஆ.ராசா பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலான ஆடியோ குறித்து தான் பேசியதற்காக, தன் மீது வழக்கு தொடரப்போவதாக வரும் செய்திகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் “என் மீது வழக்கு போடுங்கள், அதைப் பார்த்துக்கொள்ளலாம்; ஏற்கனவே பல வழக்குகளைச் சந்தித்தவன் நான்” என்று குறிப்பிட்ட அவர், அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத திமுக அரசு, உண்மையைச் சொன்ன தன் மீது கோபப்படுவதில் பயன் இல்லை என்றும் சாடினார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். திமுக என்பது ஒரு குடும்ப ஆட்சியாக மாறிவிட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி என ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இது திமுக-விற்கு இறுதித் தேர்தல் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழக முதல்வராக வரும் உரிமையை அதிமுக நிலைநாட்டும் என்று கூறி, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
