கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
மேலும் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, தனது மகளுக்கு நீதி கிடைக்கப் போராடி வரும் அவர், தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹாட்டி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிய அவர், ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், ஊழலை ஒழிக்கவும் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த வழக்கில் உண்மைகளை மறைக்க முயல்வதாகவும், நீதி கிடைப்பதில் தாமதம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டித் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் இவருக்கு, பாஜக தலைமை முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்தத் தேர்தல் களம் மேற்கு வங்க அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
