மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகளுக்குத் திடீரென சிறுநீரகம் செயலிழக்க, தனது மகளைக் காப்பாற்றத் துடித்த அந்தத் தந்தை, யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த உண்மை, அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவ உலகையே அதிர வைத்தது. ராஜுவின் இதயம் இருக்க வேண்டிய இடது பக்கத்தில் இல்லாமல், வலது பக்கத்தில் துடித்துக் கொண்டிருந்தது! ‘டெக்ஸ்ட்ரோகார்டியா’ (Dextrocardia) எனப்படும் இந்த அபூர்வ உடல்நிலை ராஜுவுக்கு இருப்பதை அதுவரை அவர் அறிந்திருக்கவே இல்லை.
இந்த விசித்திரமான உடல்நிலையால் அறுவை சிகிச்சை செய்வது டாக்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. ஒரு சிறு தவறு நடந்தாலும் ராஜுவின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தது. ஆனால், “என் உயிருக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை.. என் மகளுக்கு மறுவாழ்வு கிடைத்தே தீர வேண்டும்!” என ராஜு உறுதியாக நின்றார். அந்தத் தந்தையின் தன்னலமற்ற அன்பின் முன்னால் மருத்துவச் சவால்கள் தோற்றுப்போயின. பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, டாக்டர்கள் வெற்றிகரமாக அந்தச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முடித்தனர். இதயம் வலது பக்கம் துடித்தாலும், மகளுக்காக அந்தத் தந்தையின் பாசம் மட்டும் நேர்மையாகத் துடித்த அந்தச் சம்பவம் இப்போது இணையதளத்தையே கண்கலங்க வைத்துள்ளது
